கோவை: கோவை மாநகரில் உள்ள 5 ஹெவி பிரிவு காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை நிலவி வருவதால், கூடுதல் பணியிடங்களை ஒதுக்க தமிழக அரசுக்கு காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவல் நிலையங்கள் ‘லைட்’, ‘மீடியம்’, ‘ஹெவி’ என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இதில், ‘ஹெவி’ பிரிவு காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் உட்பட சுமார் 80 பேர் வரை பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
கோவை மாநகரில் தற்போது 20 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ‘ஹெவி’ பிரிவு காவல் நிலையங்களாக இருந்தாலும், அதற்கேற்ப போலீசார் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக வழக்குகள் தொடர்பான விசாரணைகள், ரோந்துப் பணிகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் சிரமம் ஏற்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், 2023-ஆம் ஆண்டு மாவட்ட காவல்துறையின் கீழ் இருந்த துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டன. மேலும், 2022-ஆம் ஆண்டு சுந்தராபுரம், கரும்புக்கடை மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
Also read: மதுப் பழக்கத்தால் சிதைந்த குடும்பம்; 1 வயது குழந்தையை தவிக்கவிட்டு விஷம் குடித்த தம்பதி
இந்த 5 காவல் நிலையங்களிலும் தலா 2 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 60 பேர் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது சராசரியாக 30 பேர் மட்டுமே பணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், காவல் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ளவும், இந்த 5 ‘ஹெவி’ பிரிவு காவல் நிலையங்களில் கூடுதல் போலீசாரை நியமித்து, பணியாளர் எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





