கோவை: கோவையில் நான்கு மாதங்களில் 3 போலீசார் பாலியல் புகாரில் கைதாகியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக காவல்துறையினருக்கு பாலியல் கல்வி மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான பயிற்சியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவர் பாலியல் சீண்டல் கொடுத்து கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே துடியலூர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் ஒரு போலீஸ்காரரும், கோவைப்புதூரில் சக பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கமெண்டெண்டும் கைதாகியுள்ள சூழலில், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Also Read: காதல் தோல்வி… மன உளைச்சல்: கோவையில் 18 வயது கல்லூரி மாணவர் விபரீத முடிவு
கடந்த 4 மாதங்களில் மட்டும் 3 சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், போலீசாருக்கு தமிழக அரசு முறையான பயிற்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா கூறுகையில், பல போலீசார் தங்களது பணியை முறையாக மேற்கொண்டு வரும் சூழலில், ஒரு சிலரின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த போலீசாருக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 3 புகார்கள் எழுந்துள்ளன.
இதுதவிர, டிசம்பர் மாதத்தில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் ஒருவரும் கைதாகியுள்ளார்.
இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசு உடனடியாக போலீசாருக்கு பாலியல் கல்வி மற்றும் பாலின சமத்துவம் குறித்த பயிற்சி வழங்க வேண்டும். மேலும், பெண்களுக்கான பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.





