கோவை: உலகளவில் இன்று சர்வதேச பூனைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், பூனைகளை வீட்டில் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தற்போது காணலாம்.
செல்லப் பிராணிகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. மனிதர்கள் சக மனிதர்களுடன் நட்பு பாராட்டுவதை விட, நாய், பூனை போன்ற விலங்குகளுடன் அன்பாகவும், பாசமாகவும் இருப்பது வியக்கத்தக்கது ஒன்றும் இல்லை. ஏனெனில் செல்லமாக வளர்க்கும் பிராணிகளுக்கே வளைகாப்பு நடத்தி பார்க்கும் ஊர் இது. அப்படிபட்ட செல்லப் பிராணிகளில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் பூனைகளுக்கான தினம் தான் இன்று.

அதாவது, ஆகஸ்ட் 8ம் தேதி சர்வதேச பூனைகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2002ம் ஆண்டு, விலங்குகள் நலனுக்காகச் செயல்படும் பன்னாட்டு அமைப்பான ‘International Fund for Animal Welfare’ (IFAW) என்ற அமைப்பால் இந்த தினம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகள் வெவ்வேறு தினங்களில் இந்த பூனைகள் தினத்தை கொண்டாடினாலும், இந்தியா, பிரிட்டன், கனடா போன்ற 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்றைய தினம் தான் பூனைகள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பூனைகளைப் பாதுகாப்பது, அவற்றுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் ஆதரவற்ற பூனைகளுக்கு அடைக்கலம் அளிப்பதை ஊக்குவிப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
2020ம் ஆண்டு முதல், பூனைகளின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காகச் செயல்படும் ‘International Cat Care’ என்ற அரசு சாரா அமைப்பு இத்தினத்தின் பராமரிப்புப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறது.
தெய்வமாக…
பண்டைய எகிப்தில் பூனைகள் தெய்வங்களாகவே வழிபடப்பட்டன. எகிப்தியர்கள் ‘பாஸ்டெட்’ என்ற பூனை முகம் கொண்ட பெண் தெய்வத்தை நம்பிக்கையின் அடையாளமாகக் கும்பிட்டனர். அதேபால, விவசாயிகள் பயிரிட்ட தானியங்களை எலிகளிடம் இருந்து காப்பாற்ற பூனைகளே முக்கியக் காரணமாக இருந்தன. மனிதனுக்கும் பூனைக்குமான பிணைப்பு அங்கிருந்தே வலுப்பெற்றது.

பூனை குறுக்கே சென்றால், நாம் செல்லும் காரியம் விளங்காது என்ற நம்பிக்கை ஒன்று மக்களிடையே உலா வருகிறது. குறிப்பாகக் கருப்பு பூனைகள் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்பட்டாலும், நவீன காலத்தில் பூனைகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த தோழனாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வகைகள்
உலகம் முழுவதும் சுமார் 70-க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ பூனை இனங்கள் உள்ளன. தோற்றம், உரோமங்களின் நீளம், குணம் மற்றும் உடல் அமைப்பைப் பொறுத்து பூனைகள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அதில், முக்கியமான, பிரபலமான பூனை வகைகளை கீழே காணலாம்.
1.இந்திய நாட்டுப் பூனை
2.பெர்சியன் பூனை
3.சியாமீஸ் பூனை
4.மேய்ன் கூன்
5.ஸ்காட்டிஷ் ஃபோல்டு
6.பிரிட்டிஷ் ஷார்ட்ஹேர்
7.ஸ்பிங்க்ஸ் பூனை
8.பெங்கால் பூனை
குபேரன்
பூனைகள் தூங்குவதில் குபேரன்களாம். அவை தங்கள் வாழ்நாளில் 70% நேரத்தைத் தூங்குவதிலேயே செலவிடுகின்றன. அதாவது, ஒரு நாளைக்குச் சராசரியாக 12 முதல் 16 மணி நேரம் வரை தூங்குமாம். மனிதர்களுக்கு விரல் ரேகை இருப்பது போல, ஒவ்வொரு பூனைக்கும் அதன் மூக்கு ரேகை தனித்துவம் வாய்ந்தது. பூனைகள் “உர்ர்” என உண்டாக்கும் சத்தம், மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, எலும்புகள் மற்றும் தசைகள் குணமடைய உதவும் அதிர்வெண்ணைக் கொண்டுள்ளதாக சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

பூனைகளின் காதுகளில் 32 தசைகள் உள்ளன. இதனால் அவற்றால் தன் காதுகளை 180 டிகிரி வரை திருப்ப முடியும்!
நன்மைகள்
பூனையைக் கொஞ்சுவதும், அதன் மென்மையான உரோமங்களை வருடுவதும் மனித மூளையில் ‘ஆக்ஸிடாஸின்’ என்ற மகிழ்ச்சி ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது. பூனை வளர்ப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 30 சதவீதம் வரை குறைவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாய்களுடன் ஒப்பிடும்போது, பூனைகளுக்குக் குறைந்த இடவசதியும் குறைவான பராமரிப்புமே போதுமானது. அவை தங்களைத்தானே சுத்தமாக வைத்துக்கொள்ளும் இயல்புடையவை.
இன்றைய நாள் என்ன செய்யலாம்…
உங்கள் வீட்டில் பூனை இருந்தால், அதற்குப் பிடித்த உணவு அல்லது விளையாட்டுப் பொருட்களை வாங்கிப் பரிசளிக்கலாம். சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்ற பூனைகளுக்கு உணவளித்து அன்பு காட்டலாம்.
கடைகளில் விலை கொடுத்து வாங்குவதை விட, கைவிடப்பட்ட பூனைகளைத் தத்தெடுத்து வளர்க்க முன்வரலாம்.





