கோவை: கோவை சூலூர் கல்லூரி விடுதியில் மாணவர்கள் நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி வெளியே செல்லும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி பாதுகாப்பை பலப்படுத்த பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை சூலூரில் செயல்பட்டு வரும் ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள், நள்ளிரவு நேரத்தில் விடுதி காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து வெளியே செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கோவை மாவட்டம் சூலூரில் ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி விடுதியில் கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதியில் தங்கியுள்ள சில மாணவர்கள் நள்ளிரவு நேரத்தில் காம்பவுண்ட் சுவரில் ஏறி, மறுபுறம் குதித்து வெளியே செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விடுதி பாதுகாப்பை மீறி மாணவர்கள் சுவரேறி வெளியே செல்வது குறித்து பெற்றோர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
வீடியோ
நள்ளிரவு நேரத்தில் சுவரில் ஏறி குதிக்கும்போது மாணவர்களுக்கு எதிர்பாராத விபத்து அல்லது காயம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், விடுதியை விட்டு அனுமதியின்றி வெளியே செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
பெற்றோர்கள் நம்பிக்கையுடன் தங்களது பிள்ளைகளை கல்லூரி விடுதியில் தங்க வைத்துள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மற்ற மாணவர்களின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, மாணவர்கள் நள்ளிரவில் விடுதியை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும், விடுதி பாதுகாப்பை பலப்படுத்தி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





