கோவை: காய்கறிகளை கொண்டே சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதமாக அம்மன் கோவில் அலங்கரிக்கப்பட்டு ஆடி வெள்ளி பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.
நாளைய தினம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டும் ஆடி வெள்ளியை முன்னிட்டும் கோவை பெரிய கடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் காய்கறிகளைக் கொண்டே இந்திய நாட்டை பறைச்சாற்றும் வகையில் தேசியக்கொடி, நாட்டின் வரைபடம், தேசிய பறவை, தேசிய விலங்கு ஆகியவை வடிவமைக்கப்பட்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் துவங்கியது முதல் கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கோவில் முழுவதும் ஒவ்வொரு வகையாக அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி ஆடி ஐந்தாவது வெள்ளிக்கிழமையானஇன்று மாகாளி அம்மனுக்கு காய்கறி அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளை சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளதால் காய்கறிகளை கொண்டே இந்திய நாட்டின் தேசியக்கொடி, இந்திய நாட்டின் வரைபடம், தேசிய பறவை மயில், தேசிய விலங்கு புலி, அன்னப்பறவை ஆகியவை வடிவமைக்கப்பட்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கேரட், பீட்ரூட், கத்தரி, முட்டைகோஸ், முள்ளங்கி, தக்காளி உள்ளிட்ட பல வகை காய்கறி கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.





