கோவை : கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலையைக் கண்டித்து, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள கல்லூரி அருகே திமுக மாணவரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கமே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தவெக அரசு மாணவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநில மாணவரணி செயலாளர் வீரமணி தலைமை உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்திற்கு தவெக அரசு சாதகமாக செயல்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மாணவர் கொலை தொடர்பாக முதலில் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தெரிந்ததும் அடுத்தடுத்து 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், திமுக சார்பில் உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அனிதா வீட்டிற்குச் சென்று தரையில் அமர்ந்தவர்கள், தற்போது 4 குழந்தைகள் உயிரிழந்த நிலையிலும் அந்தப் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை” என்று முதல்வரை விமர்சித்தார்.
மேலும், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாணவர் அமுதனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அரசு முன்வருமா என்றும் வீரமணி கேள்வி எழுப்பினார்.





