பூண்டி வெள்ளியங்கிரி சாலையில் ஒற்றை யானை அட்டகாசம் – பைக்கை விட்டுவிட்டு ஓட்டம்!- VIDEO

கோவை: பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கு செல்லும் சாலையில் ஒற்றை யானை திடீரென குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. யானையை பார்த்து அச்சமடைந்த பைக்கில் சென்ற நபர், வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடிய நிலையில், யானை பைக்கை மிதித்து சேதப்படுத்தியது.

Advertisement

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பூண்டி வெள்ளியங்கிரி சிவன் கோவில், பக்தர்களால் ‘தென்கயிலாயம்’ என போற்றப்படுகிறது. கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சுமார் 5.5 கி.மீ. தொலைவு கொண்டதாகும்.

வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதை வனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை உள்ளிட்ட பகுதிகளை கடந்து ஏழாவது மலையை அடைந்தால் அங்குள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க முடியும்.

மலைப்பாதை கரடு முரடாக இருப்பதுடன், ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். இந்த காலகட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் மலையேற்ற பயிற்சியாளர்கள் வருகின்றனர்.

Advertisement

மே மாதத்துக்கு பிறகு மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லாத நிலையில், அடிவாரத்தில் உள்ள பூண்டி ஆண்டவர் சிவன் கோவிலில் வழிபாடு நடைபெற்று வருகிறது. சனிப்பிரதோஷம், அமாவாசை, ஆடி வெள்ளி உள்ளிட்ட விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில், கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று முன்தினம் பூண்டி கோவில் பகுதியில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

Advertisement

வழிபாட்டை முடித்துவிட்டு நேற்று மாலை பக்தர்கள் கார், பஸ், ஆட்டோ மற்றும் பைக்குகளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளியங்கிரி கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள எஸ் வளைவு பகுதியில் ஒற்றை யானை சாலையை கடக்க முயன்றது.

அந்த நேரத்தில் பைக்கில் வேகமாக வந்த நபர், யானையின் அருகே சென்றதும் பைக்கை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் ஆவேசமடைந்த யானை, அவரை நோக்கி பிளிறியபடி துரத்தியது. அதிர்ஷ்டவசமாக அந்த நபர் யானையிடம் சிக்காமல் உயிர் தப்பினார்.

பின்னர் பைக்கின் அருகே சென்ற யானை, சிறிது நேரம் அங்கே நின்றுவிட்டு ஆத்திரத்தில் பைக்கை மிதித்து சேதப்படுத்தியது. தொடர்ந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இதனால் அந்த சாலையில் வந்த கார், பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தனர். யானை வனப்பகுதிக்குள் சென்றதைத் தொடர்ந்து இருபுறமும் வாகனங்கள் பாதுகாப்பாக கடந்து சென்றன.

இந்த சம்பவத்தால் பூண்டி வெள்ளியங்கிரி கோவில் மலையடிவாரப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதை சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. வாகனங்களை நிறுத்தி செல்போனில் பேசுவது, புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

மேலும், வாகனங்களை நிறுத்திவிட்டு சாலையோர வனப்பகுதிக்குள் நடந்து செல்ல வேண்டாம் என்றும், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தண்ணீர்பந்தல் கொடிசியா சாலையில் போக்குவரத்து மாற்றம்- விவரங்கள் இதோ…

கோவை: கோவை தண்ணீர் பந்தல் கொடிசியா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கோவை மாநகர் தண்ணீர்பந்தல் S-bend சந்திப்பு முதல் கொடிசியா சாலையிலுள்ள மின்சார அலுவலகம் வரையுள்ள சாலையில், வருகின்ற 19.08.2026 ஆம் தேதி...

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...