குலைநடுங்க வைக்கும் கோவை: இந்த மாதத்தில் 7 கொலைகள்… இன்று மட்டும் 3…!

கோவை: கோவையில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 7 கொலைகள் அரங்கேறியுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் இன்று மட்டும் மாவட்டத்தில் 3 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

Advertisement

கோவை என்றாலே அமைதி என்ற பெயர் ஒரு காலத்தில் இருந்தது. அன்பான, மரியாதையான மக்கள் வாழும் ஊர், இதமான காலநிலைக்கு பெயர் போன ஊர் என்றெல்லாம் அண்டை மாவட்ட மக்கள் நமது கோவையை பற்றி பெருமையாக பேசும் வசந்த காலம், தற்போது மெல்ல மெல்ல கரைந்து வருகிறது.

கோவையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில், எங்கு பார்த்தாலும் அடிதடி, வழிப்பறி, கொள்ளை மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்கள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

குறிப்பாக, சமீபத்திய நாட்களில் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் குற்ற சம்பவங்கள் பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளன என்றே சொல்லலாம்.

Advertisement

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் இதுவரை 7 கொலைகள் நடந்துள்ளன.

பீளமேட்டில் வெளியூரில் இருந்து தங்கி வேலை தேடி வந்த இளைஞர், முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

Advertisement

கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின் என்ற இளைஞர், நண்பர்களால் சுத்தி மற்றும் கத்தியால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை அவர்களே சமூக வலைதளங்களில் வெளியிட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read: சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் திருட்டு கும்பல் அட்டகாசம்? வைரலாகும் VIDEO!

இதனிடையே, கடந்த 10-ம் தேதி ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கோவையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு இருப்பதையும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டி சட்டப்பேரவையிலும் பேசப்பட்டது.

இந்த கொலை பரபரப்பு அடங்குவதற்குள், பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி என்ற 58 வயது பெண், சிறுவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறி வந்த கோவையில் இன்று சிங்காநல்லூர் பகுதியில் வேலுச்சாமி என்ற 59 வயது கூலித்தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். அவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில், இதுதொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று சோமனூரிலும், சுல்தான்பேட்டையிலும் மேலும் 2 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட செலக்கரைசல் காந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (39). இவர் இன்று மாலை தனது நண்பர்களுடன் கோல்டன் பேக்கரியில் டீ குடித்துவிட்டு, பின்னர் நண்பர் சந்தோஷுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

மாலை சுமார் 4.10 மணியளவில் செந்தில்குமார் தனது வீட்டின் அருகே வந்தபோது, அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கண்ணன் (35) என்பவர் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை செந்தில்குமார் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கண்ணன், அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து செந்தில்குமாரின் இடது காதுக்கு பின்புறம் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.தொடர்ந்து கண்ணனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருமத்தம்பட்டி அருகே நொய்யல் ஆற்றங்கரையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே ராமச்சியம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் நேற்று (ஆக.19) மாலை சுமார் 3.30 மணியளவில் தேவதாஸ் (35) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவதாஸ், தற்போது பல்லடம் அருகே காரணம்பேட்டையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கும் ராமச்சியம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித் (24) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

Also Read: Aug20th Power Cut in Coimbatore: மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

இந்த நிலையில், சம்பவத்தன்று தேவதாஸ் டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்ததை ரஞ்சித் மற்றும் அவரது நண்பர் அசோக் (20) ஆகியோர் பார்த்துள்ளனர். பின்னர் தேவதாஸை பின்தொடர்ந்து நொய்யல் ஆற்றங்கரை பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு கடந்த கால தகராறு தொடர்பாக தேவதாஸிடம் இருவரும் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரஞ்சித், தேவதாஸின் மார்பில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தேவதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தலைமறைவான ரஞ்சித் மற்றும் அசோக் ஆகியோர் கருமத்தம்பட்டி புதூர் அருகே தேவாலயத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்று இருவரையும் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள் நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...