மாதத்திற்கு 2,000 நாய்களுக்கு கருத்தடை! கோவையில் தெருநாய் பிரச்சினைக்கு மாநகராட்சி புதிய திட்டம்

கோவை: கோவை மாநகரில் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 1½ ஆண்டுகளில் 42,300 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள நாய்களுக்கும் படிப்படியாக கருத்தடை சிகிச்சை அளிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

கோவை மாநகரில் தற்போது சுமார் 1 லட்சத்து 11 ஆயிரத்து 74 தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.தெருக்களிலும் சாலைகளிலும் அதிகளவில் சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்துவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், நாய் கடி சம்பவங்கள் மூலம் ரேபிஸ் நோய் பரவும் அச்சமும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

கோவை மாநகரில் உக்கடம், கரும்புக்கடை, செல்வபுரம், போத்தனூர், சரவணம்பட்டி, புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உக்கடம் புல்லுக்காடு, ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நாய் கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

மாநகராட்சியின் 4 கருத்தடை மையங்களில் இதுவரை 42,300 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநகரில் கணக்கெடுக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 11 ஆயிரத்து 74 நாய்களில், மீதமுள்ள 68,774 நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது மாதத்திற்கு சுமார் 1,400 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த எண்ணிக்கையை மாதத்திற்கு 2,000 ஆக உயர்த்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநகராட்சியுடன் இணைந்து 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முழுநேரமாக செயல்பட்டு வருகின்றன.

மேலும், வெள்ளலூரில் புதிய நாய் கருத்தடை மையம் அமைப்பதற்கான திட்டமும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, கடந்த ஆண்டு கோவை மாநகரில் சுமார் 33 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30 லட்சம் செலவிடப்பட்ட நிலையில், வரும் ஆண்டில் மீதமுள்ள நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்த ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனை வளாகங்கள், அரசு அலுவலக வளாகங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பிடிபடும் தெருநாய்களை பராமரிப்பதற்காக காப்பகம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

நடப்பாண்டில் குறைந்தபட்சம் 1,000 தெருநாய்களை காப்பகத்தில் வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் கருத்தடை, ரேபிஸ் தடுப்பூசி மற்றும் காப்பக நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் வேளாண் அறிவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில் வேளாண் இணை பேராசிரியர்களுக்கு, "திறன் மேம்பாட்டுப் பயிற்சி" 19.8.2026 முதல்...

Video

கோவையில் வீட்டின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்ற யானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: வீடுகளின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ள சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை திருவள்ளுவர் நகரில் வீடுகளின் முன்புற கதவுகளை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்று பார்வையிட்டு சென்ற...