கோவை: கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் வழிதவறி வந்த அரிய வகை எறும்புத்திண்ணி பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மருதமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில், அடர்ந்த வனப்பகுதியில் இருந்து உணவைத் தேடி வந்த எறும்புத்திண்ணி ஒன்று குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது.
இதனை அப்பகுதி மக்கள் கவனித்து, உடனடியாக வன உயிரினப் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், எறும்புத்திண்ணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக மீட்டனர்.
வீடியோ
பின்னர் மீட்கப்பட்ட எறும்புத்திண்ணி, மருதமலை பகுதி வனக்காவலர் சரவணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் எறும்புத்திண்ணியின் உடல்நிலையை பரிசோதித்தனர். தற்போது எவ்வித காயமும் இன்றி உள்ள நிலையில், அதனை மீண்டும் மருதமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக கொண்டு சென்று விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





