கோவை : காந்திபுரத்தில் உள்ள தனியார் அடகுக் கடையில், அடமான நகைகளைக் குறைந்த விலைக்குத் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக, பெண் தொழில்முனைவோர் ஒருவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கணுவாய் தடாகம் சாலையில் உள்ள ராமர் கோயில் வீதியைச் சேர்ந்த சாந்தி (40), வேலாண்டிபாளையத்தில் பிளைவுட் நிறுவனம் நடத்தி வருகிறார். காந்திபுரத்தில் உள்ள தனியார் நகை அடகுக் கடையின் மார்க்கெட்டிங் ஊழியர்கள் தன்னை அணுகியதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
Also Read: மருதமலை சாலை சீரமைப்புப் பணிகள்- அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு…
கடையில் அடமானத்தில் உள்ள தங்க நகைகளை செய்கூலி, சேதாரம் இன்றி குறைந்த விலைக்குத் தருவதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். இதை நம்பி, கடந்த செப்டம்பரில் அடகுக் கடை உரிமையாளரின் வங்கிக் கணக்குக்கு ரூ.5 லட்சம் அனுப்பியதாக சாந்தி குறிப்பிட்டுள்ளார்.
உறுதியளித்தபடி தங்க நகைகளை வழங்கவில்லை என்றும், அனுப்பிய பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் மனுவில் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து ரூ.5 லட்சத்தை மீட்டுத் தருமாறு அவர் கோரியுள்ளார்.
பணம் செலுத்தும் முன் கவனிக்க வேண்டியவை
பணம் செலுத்தும்போது ரசீது பெறவும். வங்கிப் பரிவர்த்தனை விவரங்களையும் விற்பனை தொடர்பான குறுஞ்செய்திகளையும் சேமித்து வைக்கவும்.
வாங்கவுள்ள நகையை நேரில் பார்த்து, அதன் எடை, தங்கத்தின் தூய்மை, ஹால்மார்க் விவரம் ஆகியவற்றைச் சரிபார்க்கவும்.
நகையின் மொத்த விலை, வழங்கும் தேதி, முன்பணத்தைத் திருப்பித் தருவதற்கான நிபந்தனைகள் ஆகியவற்றை எழுத்துப்பூர்வமாகப் பெறவும்.





