கோவை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 75 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் திருவண்ணாமலையில் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதனைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவது வழக்கம்.
Also Read: கோவையில் கோர விபத்து மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்!
இந்த ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் இருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 75 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு வழக்கமாகக் காலையில் 3 பேருந்துகளும், இரவில் 3 பேருந்துகளும் என மொத்தம் 6 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், வரும் நவம்பர் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு 75 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகமாக இருந்தால், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்காகத் திருவண்ணாமலை செல்லத் திட்டமிட்டுள்ள கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்களுக்கு இந்தச் சிறப்புப் பேருந்து அறிவிப்பு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





