கோவை: தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வனம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கோவையில் தானியங்கி சொட்டுநீர் பாசனத்துடன், தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கோவை ஊரக வனம்’ பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூர் ஊராட்சியில், ஊராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் கோவை ஊரக வனம் – ஊராட்சி சங்கமம் திட்டத்தின்கீழ் புதிய பசுமை வனம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 33 சதவீத பசுமை இலக்கை நோக்கமாகக் கொண்டு, சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் ஊராட்சி செயலாளர்களால் இந்த வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் ‘விக்சிட் பாரத்’ திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் கலந்து கொண்டு இந்த வனத்தைத் திறந்து வைத்தார்.
இந்த வனத்தின் சிறப்பம்சமாக, மாவட்டத்தின் 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 228 ஊராட்சிகளையும் முன்னிலைப்படுத்தும் விதமாக, அந்தந்தப் பகுதிகளின் சிறப்புகளைக் கொண்டு, அதனைப் பாறை ஓவியங்கள் மூலம் வரைந்து வைத்து தூய்மைப் பணியாளர்களால் திரட்டப்பட்ட கழிவுப் பொருட்களைக் கொண்டு இந்த வனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு பிரத்தியேகமாகத் தானியங்கி முறையில் இயங்கக்கூடிய நவீன சொட்டுநீர் பாசன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்பத்தின் மூலம், நட்டு வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்குத் தடையின்றித் தானாகவே சொட்டுநீர்ப் பாயும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வனத்தைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரில் கண்டறியும் வகையில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது கிராமப்புற சூழலில் அதிநவீன தொழில்நுட்பத்துடனும், மறுசுழற்சி முறையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ‘ஊரக வனம்’ இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


