கோவை: கோவையில் அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றிய நிலையில், அவற்றை சாலையிலேயே விட்டுச் சென்றதால் போஸ்டர் குப்பைகள் காற்றில் பறந்து, வாகன ஓட்டிகள் அவதியடைந்ததுடன் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் உத்தரவை மீறி ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர்களை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள், அவற்றை அப்புறப்படுத்தாமல் சாலையிலேயே விட்டுச் சென்றதால், நகரின் பல பகுதிகளில் சாலைகள் முழுவதும் போஸ்டர் குப்பைகளாக காட்சியளித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கடந்த ஜூன் 5-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், அந்த உத்தரவை மீறி பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நகரின் பல்வேறு இடங்களில் சுவர்கள் மற்றும் பொதுஇடங்களில் விளம்பர போஸ்டர்களை ஒட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் நகரின் பல பகுதிகளில் போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அகற்றப்பட்ட போஸ்டர்களை சேகரித்து அப்புறப்படுத்தாமல், சாலையோரங்களிலும் சாலையின் நடுப்பகுதியிலும் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பல இடங்களில் காற்றில் பறந்த போஸ்டர்கள் சாலைகள் முழுவதும் சிதறிக் கிடந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதுடன், வழுக்கி விழும் அபாயமும் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், மாநகராட்சி உத்தரவை மீறி போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் மாநகராட்சி தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


