கோவை: கோவையில் கஞ்சா போதையில் நள்ளிரவில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர், எச்சரிக்க வந்த போலீசாரையே ஆபாசமாக திட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாநகரில் சமீபகாலமாக கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், மாநகரின் சில பகுதிகளில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, சவுரிபாளையம் பிரிவில் இருந்து உடையாம்பாளையம் செல்லும் சாலையில் நள்ளிரவு 12.30 மணிக்குப் பிறகும் சிகரெட், குடிநீர் பாட்டில் மற்றும் ஸ்நாக்ஸ் கடைகள் செயல்பட்டு வருவதால், அந்தப் பகுதியில் போதை ஆசாமிகள் அதிகளவில் கூடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் மற்றும் குடும்பத்தினர் வெளியே வர அச்சப்படும் சூழல் நிலவி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
Also Read: ஜூலை 10ல் வெளியாகும் ஓடிடி ரிலீஸ்… என்னென்ன படங்கள் தெரியுமா?
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு சவுரிபாளையம் பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் சாலையில் நிற்கக்கூட முடியாமல் தள்ளாடியபடி, அங்கு சென்ற பொதுமக்களை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், வீடியோ பதிவு செய்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டியதுடன், அவரை நோக்கி ஆவேசமாக நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
நிலைமை மோசமடைவதை உணர்ந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், ரோந்துப் பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த வாலிபரை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். மேலும், வீடியோ பதிவு செய்த நபரை மிரட்டியதாகக் கூறி, அவரது செல்போனை ஒப்படைக்குமாறும் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: கோவையில் போதைப்பொருள் வேட்டை: இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், போலீசார் முன்னிலையிலேயே ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், “எதுக்கு என் போனை கேக்குற? நான் தப்பு பண்ணல… என் மேல ஒரு வார்த்தை தப்பா சொல்ல முடியாது. என்னை எவ்வளவு வேணாலும் அடிச்சுக்கோ… என் மேல தப்பு இல்ல. நாளைக்குக் காலையில உன்னை பாத்துக்கலாம்… சத்தியமா பாப்போம்… கண்டிப்பாகப் பார்ப்போம்!” என்று போலீசாரையே மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
நீண்ட நேரம் போலீசார் அவரை சமாதானப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் தொடர்ந்து போதை மயக்கத்தில் ரகளையில் ஈடுபட்டதால், போலீசார் அங்கிருந்து நகர்ந்ததாக தகவல்
வெளியாகியுள்ளது.
வீடியோ
இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். “பாதுகாப்பு வழங்க வந்த போலீசாரையே மிரட்டும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டால், சாதாரண மக்களின் பாதுகாப்பு என்ன? இதுபோன்ற போதை ஆசாமிகளிடமிருந்து எங்களை யார் காப்பாற்றுவார்கள்?” என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், வீடியோவில் பதிவாகியுள்ள வாலிபரை அடையாளம் காணும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


