கோவை: கோவையில் வீடியோ காலில் இளம் பெண்ணுடன் நிர்வாணமாக பேசியதை ஸ்கிரீன் ரெக்கார்டு செய்து, அதனை உறவினர்களுக்கு அனுப்பி கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதை உறவினர்களுக்கு அனுப்பி, கல்லூரி மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டியவர்களை குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த இளம்பெண்ணுடன் மாணவர் நன்றாகப் பேசி, நட்பாக பழகி வந்தார்.
இந்நிலையில், அந்த மாணவர் இளம்பெண்ணுடன் வீடியோ காலில் நிர்வாணமாகப் பேசியுள்ளார். அதை அந்த இளம்பெண் மாணவருக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்ததாக தெரிகிறது. வீடியோ கால் முடிந்த சில நிமிடங்களிலேயே அந்த மாணவரின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அந்த வீடியோ அனுப்பப்பட்டுள்ளது.
அதைப் பார்த்த மாணவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த வீடியோவில் மாணவர் மட்டும் நிர்வாணமாக இருப்பது பதிவாகி இருந்தது. உடனே அந்த மாணவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டார்.
மிரட்டல்
ஆனால், மறுமுனையில் வாலிபர் ஒருவர் பேசினார். அவர், “நாங்கள் அனுப்பிய நிர்வாண வீடியோவை உன் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பாமல் இருக்க ரூ.20,000 தர வேண்டும்” என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்த மாணவர், உடனடியாக தன்னிடம் இருந்த ரூ.20,000 பணத்தை அந்த நபருக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் மீண்டும் அந்த நபர் மாணவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினார். அதற்கு மாணவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.
உடனே அந்த நபரும், இளம்பெண்ணும் “பணம் அனுப்பவில்லை என்றால் உன் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வீடியோவை அனுப்பிவிடுவோம்” என்று மிரட்டினர்.
இருப்பினும் மாணவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் அந்த இளம்பெண் மற்றும் அந்த நபர், மாணவரின் நிர்வாண வீடியோவை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இன்ஸ்டாகிராம் ஐடிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
Also Read: இன்றும் நாளையும் ஜிடி மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை…
இது குறித்து மாணவரிடம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த மாணவர் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த இளம்பெண் மற்றும் வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


