கோவை: கோவை சுற்றுவட்டாரத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், மழை பெய்ய வேண்டி மனிதர்களைப் போலவே கழுதைகளுக்கு மேளதாளம் முழங்கப் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அன்னூரை அடுத்த லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாததால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால், கிராம மக்கள் பழங்கால ஐதீகமான ‘பஞ்ச கல்யாணி’ முறையிலான கழுதைகள் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வறட்சி நிலவிய போது, இதே போல் கழுதைகளுக்குத் திருமணம் நடத்தி மழை பெய்ததாகப் பெரியோர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று அப்பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் இந்தத் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதைக்கு வண்ணப் புடவை கட்டி, வளையல், பாசி, Lipstick, Nail Polish பூசி மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது.
பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதைக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மணமகன், மணமகள் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது.
Also Read: “பாகுபலி பாணியில் பேருந்தை தள்ளிய போதை ஆசாமி” – கோவை சிங்காநல்லூரில் வைரல் வீடியோ!
கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின், மேளதாளங்கள் முழங்க பெண் கழுதைக்குத் தாலி கட்டப்பட்டுத் திருமணம் பாரம்பரிய முறைப்படி இனிதே நிறைவுற்றது.
மனிதர்களின் திருமணங்களைப் போலவே, இத்திருமணத்திற்கு வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் மொய்ப்பணம் வழங்கிச் சென்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சுடச்சுட கம்பங்கூழ் வழங்கப்பட்டது. திருமணத்தைத் தொடர்ந்து ‘மறுவீடு அழைப்பு’ நிகழ்வும் நடைபெற்றது.
VIDEO
கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்து உள்ளதால், நிச்சயம் இந்த ஆண்டும் இந்த ஐதீகம் பலித்து, காரி மழை பொழியும் என்ற நம்பிக்கையில் லக்கேபாளையம் கிராம மக்கள் மழையை எதிர்பார்த்துக் காத்து உள்ளனர்.
Also Read: பூண்டி வெள்ளியங்கிரி சாலையில் ஒற்றை யானை அட்டகாசம் – பைக்கை விட்டுவிட்டு ஓட்டம்!- VIDEO





