கோவை: அடகு வைத்த நகைகள் ஏலத்துக்கு வருவதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகவும் கூறி பலரிடம் ரூ.1¾ கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் வாலிபர் ஒருவர், தான் அந்த நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் ஏலத்துக்கு வர இருப்பதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பலர், அந்த வாலிபரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு பலரிடம் இருந்து அவர் சுமார் ரூ.1¾ கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது. ஆனால் பணம் பெற்றுக் கொண்ட பின்னரும், பல நாட்கள் ஆகியும் கூறியபடி குறைந்த விலையில் நகைகளை வாங்கித் தரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பணம் கொடுத்தவர்கள், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது, இதுபோன்று நகைகளை குறைந்த விலையில் வாங்கித் தரும் எந்த திட்டமும் இல்லை என நிதி நிறுவனத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
Also Read: கோவையில் காவலர்கள் லஞ்சம் வாங்கினால் மக்கள் புகார் தெரிவிக்கலாம்…
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பணம் வசூலித்த நபர் உண்மையில் அந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றினாரா, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட விவரங்களை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1¾ கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





