கோவை: நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 20-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை நவ இந்தியா பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்குவதற்காக அப்பகுதியில் தகரத்திலான தற்காலிகக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதிய வேளையில் அங்குள்ள ஒரு வீட்டில் தொழிலாளர்கள் தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பைப் பற்ற வைத்தபோது, எதிர்பாராதவிதமாக எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றபோதும், தீ கட்டுக்கடங்காமல் அடுத்தடுத்த தகரக் கொட்டகைகளுக்கும் வேகமாகப் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக குடியிருப்பில் இருந்து வெளியேறினர்.
தீயின் தாக்கம் தீவிரமடைந்ததால், கொட்டகைகளுக்குள் இருந்த 20-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், 5 தீயணைப்பு வாகனங்களில் 60-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மீட்பு
மேலும், குடியிருப்புக்குள் வெடிக்காமல் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் சாதுர்யமாக மீட்டு, பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
இந்தத் தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கனேசன் கூறுகையில்:
“தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும், வடக்கு தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அருகிலுள்ள நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வீடியோ காட்சிகள்
விபத்து நடந்த இடத்தில் சுமார் 40 முதல் 50 சிலிண்டர்கள் வரை வைக்கப்பட்டிருந்தன. அதில் வெடிக்காத நிலையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
இந்தத் தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. கட்டிடத்திற்குள் ஏற்பட்டுள்ள வெப்பம் மற்றும் புகையைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, காவல் துறையினர் அப்பகுதியைப் பாதுகாப்புக்குள் கொண்டு வந்து, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.
Also Read: பெட்ரோல் அடித்தால் காற்று தான் வருகிறது; கோவையில் ஷாக்





