கோவை: கோவையில் தண்ணீர் லாரி கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தண்ணீர் லாரி ஒன்று அதிவேகமாகச் சென்றது. அந்த லாரி துடியலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தறிகெட்டுச் சென்ற லாரி, கண் இமைக்கும் நேரத்தில் அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளின் மீதும் சாலையின் தடுப்புச் சுவரிலும் மோதி பல்டி அடித்தது.
மேலும், சாலையில் மூன்று முறை உருண்டு சென்று, அங்கு சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது மோதி விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் நூலிழையில் உயிர்தப்பினர். இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுநர் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் லாரிக்குள் சிக்கிய நிலையில் இருந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காட்சிகள்
விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, லாரி ஓட்டுநரின் அதிவேகமே இந்த விபத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது தெரியவந்தது.
மேலும், லாரியில் வேறு ஏதேனும் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை உறையவைத்துள்ளது.


