கோவை: கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே தொங்கியபடி ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காவல்துறையினர் முன்னிலையில் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே, அதிவேகமாகச் சென்ற காரின் மேற்கூரையில் மூன்று பேர் அமர்ந்தும், மற்றொருவர் ஜன்னல் வழியே தொங்கியபடியும் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த ஆபத்தான செயல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Also Read: இப்போ பாட்டிலுக்கு 5 ரூவா… கோவையில் அமைச்சர் விக்னேஷ் பதில்!
இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியானதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி உத்தரவின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களை ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையில், இந்த சாகசத்தில் ஈடுபட்டது பீளமேட்டைச் சேர்ந்த சரவணகுமார் (24), இராமநாதபுரத்தைச் சேர்ந்த சென்றாயப்பெருமாள் (24), மதுரையைச் சேர்ந்த ராகுல்குமார் (19) மற்றும் பாரதி நகரைச் சேர்ந்த நிர்மல்குமார் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, சாகசத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.
Also Read: கோவை மாணவர்களை குறிவைத்த போதை கும்பல் சிக்கியது!
கைது செய்யப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் (Cr.No.211/2026, பிரிவுகள் 281, 125, 292 BNS r/w 184 MV Act) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களும் காவல்துறையினர் முன்னிலையில் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினர். மேலும், இனி இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடமாட்டோம் என்றும், இளைஞர்களும் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்தனர். அவர்கள் மன்னிப்பு கோரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுச் சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்கள் உயிரிழப்பு மற்றும் கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இனி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
மேலும், பெற்றோர்கள் தங்களது வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற விதிமீறல்களைக் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





