கோவை: முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், கோவையில் இன்று மேலும் 10 டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டன. மீதமுள்ள கடைகளையும் 15 நாட்களுக்குள் மூட நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட முதலமைச்சர் விஜய் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை கணக்கெடுத்து மூடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோவை வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில், வடக்கு பகுதியில் 156 கடைகளும், தெற்கு பகுதியில் 128 கடைகளும் என மொத்தம் 284 கடைகள் உள்ளன.
இந்த ஆய்வில், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே கோவை வடக்கு பகுதியில் 48 கடைகளும், தெற்கு பகுதியில் 21 கடைகளும் என மொத்தம் 69 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த 69 கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக நேற்று சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை உட்பட 4 கடைகள் மூடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இன்று கோவை வடக்கு மாவட்டத்தில் 5 கடைகளும், தெற்கு மாவட்டத்தில் 5 கடைகளும் என மொத்தம் 10 டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டன.
மீதமுள்ள டாஸ்மாக் கடைகளையும் அடுத்த 15 நாட்களுக்குள் மூட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



