கோவை: கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் செண்டை மேள நிகழ்ச்சி விழாவுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தின.
கேபிஆர் கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் ஆகியோர் விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேலும், ஒற்றுமை, கலாசார நல்லிணக்கம் மற்றும் இந்தியாவின் பன்முகப் பண்பாட்டை மதிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
ஓணம் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகம் முழுவதும் கேரளத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாரம்பரிய ஓணம் உடைகளில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிவகுப்பு, நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து வடம் இழுத்தல், உரியடி, சாக்கு ஓட்டம், எலுமிச்சை–கரண்டி ஓட்டம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
இதையடுத்து நடைபெற்ற இருசக்கர வாகன சாகச நிகழ்ச்சியில் பல்வேறு சாகசங்கள் செய்து காட்டப்பட்டன. இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

விழாவின் முக்கிய அம்சமாக நடைபெற்ற செண்டை மேள நிகழ்ச்சி கல்லூரி வளாகம் முழுவதையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும், பாரம்பரிய உடைகள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்ட பல்வேறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
விழாவின் நிறைவாக, கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகள் அடங்கிய ‘ஓண சத்யா’ விருந்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து ஓணம் விழாவை கொண்டாடியது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.





