கோவை : ரத்தினபுரி அருகே வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வாலிபரை பிடிக்க முயன்ற பெண்ணை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
கோவை ரத்தினபுரி அருகே உள்ள மகேஸ்வரி நகர், தாய் இருட்டேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி தீபா (30).
சம்பவத்தன்று காலை தீபா தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு தீபா அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவை திறக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து உள்ளே பார்த்தபோது, அங்கு வாலிபர் ஒருவர் நகைகளை திருடுவதற்காக பொருட்களை தேடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா, அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர் தீபாவை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தீபா ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் அழகுமணி செல்வம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றவர் மேஸ்திரி மாரப்பன் தெருவை சேர்ந்த மணிகண்டன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்தினபுரி அருகே வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது. பெண்ணை தள்ளிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.





