கோவை:கோவை சிங்காநல்லூரில் பறக்கும் படை அதிகாரிகளை பார்த்ததும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுகவினர் பணத்தை தூக்கி எறிந்து தப்ப முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகளை பார்த்ததும் பணத்தை தூக்கி எறிந்து தப்ப முயன்ற அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் வாக்காளர்களை கவர வீடு வீடாக பணம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒண்டிப்புதூர் சண்முகா லேஅவுட் பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று பணம் விநியோகம் செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் ஜீப்பில் வருவதை கண்டதும், அதிமுகவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது கையில் இருந்த நோட்டுப் புத்தகம் மற்றும் ரூ.48,000 பணத்தை அருகிலிருந்த கால்நடை கொட்டகைக்குள் வீசி விட்டு தப்பினார். அவருடன் இருந்தவர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து, வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த ரூ.48,000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கார்த்திகேயன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.


