கோவை: விஜய்யை பவர்சென்டர்கள் இயக்குகின்றனர் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கும் போது, ஆட்சியில் இல்லாத திமுக குறித்து விஜய் பேசுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று முதல்வர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ஆவலோடு காத்திருந்தோம். தமிழக காவல்துறை வலுவான கட்டமைப்பைக் கொண்டது.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கை பாதிக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை, போதை கலாச்சாரத்தால் பாதிப்புகள் நடைபெற்றுள்ளன.
கட்டுப்பாடில்லாமல் நடக்கும் கொலைகளையும், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான குற்றங்களையும் தடுக்க என்ன நடைமுறைகள், என்ன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை முதல்வர் விளக்குவார் என்று எதிர்பார்த்தோம்.
குற்றங்கள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதையும் எதிர்பார்த்தோம்.
ஆனால், இன்று முதல்வர் பேசியது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மக்களின் ஐயங்களுக்கு பதில் அளிப்பதாக இல்லை.
திமுக தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அதே கட்சியை தாக்குவதற்கு சட்டமன்ற நிகழ்வை பயன்படுத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக இருந்தது. விடிவுகாலமே இல்லையா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது.
திமுக மட்டுமே ஊழலுக்கு சொந்தமான கட்சி இல்லை. ஜெயலலிதா மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்து, அவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஊழலை ஒழிப்பதே குறிக்கோளாக இருந்தால், விஜய் நடுநிலையோடு வாதத்தை முன்வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அவர் திமுகவை மட்டுமே குறிப்பிட்டு பேசுகிறார்.
திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகிறார். உங்களை ஆர்.எஸ்.எஸ். என்று முத்திரை குத்தியவர்கள் தயவில் ஆட்சி அமைப்பது அவமானகரமானது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டு, ஒரு கட்சியை மட்டும் குற்றம்சாட்டுவது எப்படி சரியாக இருக்கும்?
சினிமா பாணியில்தான் முதல்வரின் பதில் இருக்கிறது. சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாக தெரியவில்லை.
ஆட்சியில் இல்லாதவர்கள் 90-களில் செய்ததைப் பேசுகிறார். அதன் பிறகும் திமுக ஆட்சி அமைத்தது.
தமிழ்நாட்டில் இன்று என்ன நடக்கிறது? அதைத்தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இல்லை.
இந்த வாய்ப்பை முதல்வர் வீணடித்துவிட்டார். ஆவேசமாக பேசுவதற்கெல்லாம் எதுவுமே இல்லை.
எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டும்போது, அவர்கள் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அந்த வாய்ப்பை கொடுக்காமல் வெளியேற்றிய முறைகள் சரியாக இல்லை.
பொதுமேடைக்கு வந்தால் விமர்சனங்கள் வரும். அதனை எதிர்கொள்ள வேண்டும்.
அமலாக்கத்துறை ஒரு ஏஜென்சி. அது நீதிமன்றத்திற்குச் சென்று குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மரபு வழியாக பேசவில்லை.
அவருக்கு வாக்களித்தவர்கள் இளைஞர்கள். சினிமா மோகத்தால் கவரப்பட்டவர்கள், அரசியலைப் படிக்க வாய்ப்பில்லாதவர்கள். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே விஜய்யின் பேச்சு இருந்தது.
தமிழக அரசியல் சட்டமன்றத்தோடு முடிந்துவிடாது. விஜய்யிடம் ஏதோ ஒரு பலவீனம் தென்படுகிறது.
உண்மையிலேயே குற்றம் செய்தவர்களை தண்டிக்க நினைத்தால், எதற்காக செந்தில் பாலாஜியை நூறுமுறை சொல்ல வேண்டும்?
ஜெயலலிதா சிறைக்குச் செல்லவில்லையா? இதிலேயே விஜய் நேர்மையாக இல்லை என்பது தெரிகிறது.
பேசுவதற்கு அர்த்தம் இருக்க வேண்டும். முதல்வர் என்ற எண்ணமும், பொறுப்பும் வந்ததாக விஜய்க்குத் தெரியவில்லை.
அந்தந்த துறை சார்ந்த கேள்விகளுக்கு, துறை சார்ந்த அமைச்சர்கள்தான் பதிலளிக்க வேண்டும். அதுவே ஏற்புடையதாக இருக்கும்.
அவரிடம் செய்திகளை வடிகட்டி, குளிர்விக்கும் தகவல்களை மட்டுமே அதிகாரிகள் சொல்கிறார்கள். பவர்சென்டர்கள் விஜய்யை இயக்குகின்றனர்.
இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.





