கோவை : பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் உள்பட 2 பேரிடம் ரூ.61 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 30 வயது தொழிலதிபர் ஒருவர், பிட்காயினில் முதலீடு செய்வது தொடர்பான தகவல்களை இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது அவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில், பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, குறுஞ்செய்தியில் இடம்பெற்றிருந்த செல்போன் எண்ணை அவர் தொடர்பு கொண்டுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர், தங்கள் நிறுவனம் சார்பில் பிட்காயின் முதலீட்டு திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தேவையான நேரத்தில் பிட்காயினை தங்களிடமே விற்பனை செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய தொழிலதிபர், அவர்கள் கூறிய செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் வழங்கப்பட்ட ஐ.டி. மூலம் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளார். செயலியில் அவர் முதலீடு செய்த தொகையும், அதற்கான லாபமும் தனித்தனியாக அதிகரித்து வருவது போல் காட்டப்பட்டுள்ளது.
இதனால் நம்பிக்கை அடைந்த அவர், 15-க்கும் மேற்பட்ட தவணைகளில் மொத்தம் ரூ.36 லட்சம் முதலீடு செய்துள்ளார். பின்னர் அவசரமாக பணம் தேவைப்பட்டதால், முதலீடு செய்த தொகையையும் லாபத்தையும் சேர்த்து வங்கி கணக்கில் திரும்பப் பெற முடிவு செய்துள்ளார்.
இதற்காக பிட்காயின் முதலீடு தொடர்பாக பேசிய நபரை தொடர்பு கொண்டு பணத்தை வங்கி கணக்குக்கு மாற்றி அனுப்புமாறு கேட்டுள்ளார். பணத்தை அனுப்புவதாக அந்த நபரும் தெரிவித்துள்ளார். ஆனால், 5 நாட்கள் கடந்தும் பணம் வங்கி கணக்குக்கு வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த தொழிலதிபர் மீண்டும் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் தான் மோசடி செய்யப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
இதேபோல், கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடமும் பிட்காயின் முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இருவரிடமும் மொத்தம் ரூ.61 லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில், பணத்தை இழந்த இருவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தனர்.
புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட செயலி உள்ளிட்ட விவரங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிட்காயின் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி அறிமுகமாகும் அடையாளம் தெரியாத நபர்களிடம் பணம் செலுத்துவதற்கு முன்பு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.





