கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி கோயில் உள்ளது. இங்கு 7வது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் மஹா சிவராத்திரி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நேற்று மஹா சிவராத்திரியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவிந்தனர்.
அவர்கள் மலைப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, சீதை வனம்,அர்ச்சுணன் வீல், ஆண்டி சுனை ஆகியவற்றை கடந்து 7வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்தனர்.
வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதற்காக நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தவாறு இருந்தனர். இரவில் பக்தர்கள் கூட்டம் மலையில் அலைமோதியது. இவர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் தனி குழுவும் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் நேற்று இரவில் ஈஷா யோகா மையத்திற்கும் ஏராளமானோர் வந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

