கோவை: கோவை மாநகரில் போலீசார் நடத்திய தொடர் சோதனையில் 12.5 கிலோ கஞ்சாவுடன் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று ஆர்.எஸ்.புரம் போலீசார் ப்ரூக்ஃபீல்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சாவுடன் இருந்த சரவணம்பட்டியை சேர்ந்த ராம்ராஜ் (29) என்பவரை கைது செய்தனர்.
அதேபோன்று உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த முகமது அனஸ் (31) என்பவரை சோதனை செய்தபோது, அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் காட்டூர் போலீசார் ஆவாரம்பாளையம் ரோட்டில் ரோந்து சென்றபோது, அங்குள்ள தனியார் பஸ் பட்டறை அருகே 12.5 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த திருப்பூரை சேர்ந்த சனீஸ்வரன் (28), ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (19) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள், எடை போடும் எந்திரம், பேக்கிங் பொருட்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டனர் என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.






Comments are closed.