கோவை: கோவையைச் சேர்ந்த சிறுமி சர்வதேச சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு, தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார்.
வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி அகல்யா (9). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி அகல்யா கடந்த நான்கு ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் யோகா பயின்று வருகிறார்.
இந்த நான்கு ஆண்டுகளில் சிறுமி அகல்யா மொத்தம் ஏழு உலக சாதனைகளை படைத்துள்ளார். இது மட்டுமின்றி மாவட்டம், மாநிலம், தேசியம் மற்றும் சர்வதேச அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 14, 15ஆம் தேதிகளில் ஓசூரில் வேர்ல்ட் யூனியன் சிலம்பம் பெடரேஷன் சார்பாக சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறுமி அகல்யா இந்தியா சார்பாக பங்கேற்றார். இந்தப் போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்ற சிறுமியாக இரட்டை கம்பு வீச்சில் தங்கப் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒற்றை கம்பு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் கோவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சிறுமிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

