திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், திருநீறு பூசுவதும் தவறா – வானதி கேள்வி…

கோவை: திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், திருநீறு பூசுவதும் தவறா என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவை டாடாபாத் பகுதியில் பாஜக இளைஞரணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திமுக அரசில் போதைப்பழக்கம் அதிகமாகி விட்டதாகவும், அதனை கண்டிக்கும் விதமாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். பேசியதாவது:-

ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். வசதி படைத்த இளைஞர்கள் உலகம் முழுவதும் அவர்களது திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியுள்ளது தமிழ்நாடு தான். தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை அனுமதிக்க வைத்திருப்பது திமுக அரசு தான்.

திமுக அரசின் தோல்வியின் காரணமாகவும், நிர்வாக சீர்கேடுகள் காரணமாகவும், காவல்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கினாலும், பல்வேறு போதைப்பொருட்கள் கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கின்றன. ஆனால், பாஜக-வில் உள்ளவர்களுக்கு போதைப்பொருட்கள் பற்றி தெரியாது.

திமுக அரசு ஐந்து வருடம் நிறைவு செய்துள்ளதில் கஞ்சா வழக்குகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஒருபுறம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வேறுவேறு பெயர்களில் திறந்து வைப்பது சாதாரணமாகிவிட்டது. இதனால் நடுத்தர வயதில் இருக்கக்கூடியவர்கள் அனைவரும் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளும் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடிய மோசமான காலகட்டத்தை தமிழ்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது.

சினிமாவில் இருந்து பலரும் வருகிறார்கள், பல்வேறு தலைவர்களும் இருக்கிறார்கள். சினிமாவில் கதாநாயகனை ரசிப்பது வேறு, அவர்களுக்கு ஓட்டுபோட்டு முதல்வராக்குவது வேறு. தமிழக முழுவதும் விசில் சத்தம் அதிகமாக கேட்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். எங்கள் வீட்டிலும் பால் குக்கர், விசில் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

முதல்வர் முகஸ்டாலினும் அவரது மகனை முதல்வராக்குவதற்கு தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சிறு வயது பெண்கள் குழந்தைகள் எல்லாம் போதைப் பழக்கத்தின் ஆதிகத்திற்கு ஆட்பட்டு குற்றச் செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர். திமுக அரசு இளைய சமுதாயத்தை சீரழிக்க கூடிய அரசாக மாறியிருக்கிறது.

ஒருபுறம் டெல்லியில் பிரதமர் மோடி, “இளைஞர்களின் Innovationயை பாருங்கள் புதிய கண்டுபிடிப்புகள் அறிவியல் மேம்பாடு ஆகியவற்றை பாருங்கள்” என்று உலகத்தில் இருக்கக்கூடிய தலைவர்களுக்கெல்லாம் காட்டிக் கொண்டிருக்கும் பொழுது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் இளைஞர்களும், சிறுவர்களும் பெண்களும் போதைக்கு ஆளாகி கொண்டிருக்க கூடிய சூழல் உள்ளது.

இந்த அரசாங்கம் எப்படி இருந்தாலும் வீட்டிற்கு செல்லக்கூடிய அரசாங்கம், ஆனால் அது ஏற்படுத்தி இருக்கக்கூடிய பாதிப்பு என்பது இந்த ஐந்து வருடத்திற்கு மட்டுமல்ல வருங்கால தலைமுறைகளையும் பாதிக்கும், இளைஞர்கள் இவை அனைத்தையும் சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து வானதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேமுதிக, திமுகவுடன் கூட்டணி குறித்து பாஜக தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து விட்டார்கள். விஜயகாந்த் 2014 ஆம் ஆண்டு நாங்கள் தமிழகத்தில் கூட்டணி அமைத்த பொழுது எவ்வாறு உதவியாக இருந்தார் என்பதும், மோடிக்கு ஆதரவாக விஜயகாந்த் எந்த அளவிற்கு பிரச்சாரம் செய்தார் என்பதும் தெரியும். அவருடைய சிந்தனை எல்லாம் நாட்டின் வளர்ச்சியை நோக்கி இருந்தது.

ஆனால், பிரேமலதா விஜயகாந்த் நேற்று எடுத்த முடிவு என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கிறேன். தமிழகத்தின் நலன் கடந்த ஐந்தாண்டுகளாக எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதை புரிந்த பிறகும் கூட பல்வேறு கூட்டங்களில் அதைப் பற்றி பேசியிருந்தாலும் கூட திமுக கூட்டணியில் அவர் இணைந்து இருக்கிறார் என்பது தமிழகத்தின் நலனை பிரேமலதா விஜயகாந்த் சிந்திக்கவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

பாஜக வந்த பிறகுதான் திருவள்ளுவர் காவியுடைய அணிவது திருநீறு பூசுவது ருத்ராட்சம் மாலை அணிவது போன்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் ஒன்றும் கிடையாது. நம்முடைய ஆதீனங்கள் சைவ மதங்களில் எல்லாம் பார்த்தோமேயானால் திருவள்ளுவரின் புகைப்படங்கள் மத அடையாளங்களோடு இருக்கும். மத அடையாளங்களோடு இருப்பவர்தான் திருவள்ளுவர்.

இந்து மதத்தைப் பற்றி இந்து கடவுள்களைப் பற்றி திருக்குறளில் பேசியிருக்கக் கூடிய திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்தால் என்ன தவறு? திருநீறு பூசினால் என்ன தவறு? திருநீறு பூசுவதும் காவி உடை அணிவதும் தேச விரோதமா?

தமிழரின் அடையாளம் விபூதி நம்முடைய நாட்டின் நிறம் காவி தான். அன்றெல்லாம் ஒவ்வொரு கோவில்களிலும் காவி நிறம் தான் இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி தனது தாய்மொழி தின வாழ்த்தில், காவி நிற உடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை பயன்படுத்தியதும், நீக்கியதும் குறித்து எனக்குத் தெரியாது. என்றார்.

அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்தான கேள்விக்கு,

“ஒரு புதிய கட்சி வருகின்ற பொழுது, ஏற்கனவே இருக்கின்ற கட்சியில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைப்பவர்கள் வேறு புதுக்கட்சிக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அவருக்கு நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் என்கின்ற உயர்ந்த அங்கீகாரத்தை கொடுத்தது. அவர் எந்த தனிப்பட்ட காரணத்திற்காக போயிருக்கிறார் என்பது தெரியாது.” என்றார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.