கோவை: டெலிவரிக்கு சென்ற இடத்தில் வாலிபர் ஒருவர் கைவரிசை காட்டியதால், கோவை கல்லூரி மாணவி ஒருவர் விபரீதமுடிவு எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லை 20 வயது மாணவி கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 3ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் பீளமேடு ஹோப்ஸ் கல்லூரி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிருந்தார். அவருடன், அவரது 3 தோழிகளும் தங்கி இருந்தனர்.
உணவு டெலிவரி
இந்த நிலையில் மாணவிக்கு கோவையில் உணவு டெலிவரி செய்து வரும் ஈரோட்டை சேர்ந்த பிரவீன் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்கையில் ஏற்பட்ட பழக்கம் மூலம், இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தனர்.
பிரவீன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், தங்க செயினை கொடுத்தால் 2 மாதங்களில் திருப்பித்தந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பி மாணவி பரிதாபப்பட்டு தனது 1.5 பவுன் தங்கச் செயினை கொடுத்துள்ளார். அதன் பின்னர் வெகுநாட்களாகியும் பிரவீன் நகையை திருப்பித்தரவில்லை.
செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி பெற்றோரைப் பார்க்க வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது பெற்றோர் கழுத்தில் இருந்த செயின் குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு மாணவி, நகை தொலைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். உடனே அவரது பெற்றோர் கோவை சென்றதும் போலீசில் புகார் அளிக்கும் படி கூறியுள்ளனர். கோவை திரும்பிய அவர் நகை குறித்து நினைத்து மனவேதனையுடன் இருந்து வந்தார்.
கோவை கல்லூரி மாணவி
கடந்த 11ம் தேதி மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு சென்று மாலை விடுதிக்கு திரும்பினார். அறையில் இருந்த அவரது தோழிகள் வெளியில் சென்று விட்டனர். மாணவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாணவி தற்கொலைக்கு காரணமான பிரவீனை தேடி வந்தனர். அப்போது கோவையில் பதுங்கி இருந்த அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதே வேலை
விசாரணையில் பிரவீன் குறித்து பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பிரவீன் உணவு டெலிவரி செய்யும் பணி செய்து வந்துள்ளார். அதன் மூலம் அறிமுகமாகும் பெண்களிடம் பழகி வந்துள்ளார். அப்போது அவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் குடும்ப கஷ்டம் என கூறி பரிதாபமாக பேசி சிறிய அளவில் பணத்தை பறித்து வந்துள்ளார்.
பின்னர் பணத்தை யாராவது கேட்டால் அவர்களது நட்பை துண்டித்து விடுவார். சிறிய அளவில் மட்டும் பணத்தை வாங்கி ஏமாற்றி வந்ததால் அவர் மீது யாரும் புகார் அளிக்கவில்லை. இதனைப் பயன்படுத்தி அவர் தொடர்ந்து பெண்களிடம் பணம் பறித்து வந்துள்ளார்.
இதேபோல மாணவியிடமும் பழகி நகையை பறித்துள்ளார். இதன் பின்னர் நகையை திருப்பி தராமல் மோசடி செய்து ஏமாற்றிவிட்டார். இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பிரவீன் மீது கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரவீனின் தாய், தந்தை இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் அவர்கள் பிரவீனை கண்டு கொள்ளவில்லை. அவரும் தினமும் மது குடித்து விட்டு ஜாலியாக இருந்து வந்துள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

