கோவை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சருடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பு இடங்கள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் தெரிவித்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் 2024-ஆம் ஆண்டு 119 இடங்களும், 2025-ஆம் ஆண்டு 145 இடங்களும் எந்த நிபந்தனையும் இன்றி ஒன்றிய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கட் ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருந்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த சேவை மருத்துவர்களுக்கு சேர்க்கை கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வலுவாக வாதாடியதாகவும், மாநில உரிமைகளையும் அரசு மருத்துவர்களின் நலனையும் பாதுகாக்க தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், ஒன்றிய கவுன்சிலிங்கில் கட் ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டால், அந்த இடங்கள் மீண்டும் மாநிலத் தொகுப்பிற்கே வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில், உயர்மறை மருத்துவப் படிப்பு இடங்கள் முழுமையாக மாநிலத் தொகுப்பு மூலமே நிரப்பப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அமைச்சர், கடந்த ஆட்சியில் தொழில் தொடங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகளே முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்ல காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டினார். தற்போதைய வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தின் காரணமாக, பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன என்றும், தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை சமாளிக்க மாவட்ட அளவில் நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத் தடை ஏற்பட்டதாகவும், இருப்பினும் செவிலியர்களின் நலனை முன்னிறுத்தி இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சருடன் ஆலோசித்து விரைவில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.





