கோவை: நாடு முழுவதும் இன்று முதல் E20 பெட்ரோல் விற்பனை அமலுக்கு வந்துள்ளதால், பழைய வாகன ஓட்டிகள் தங்கள் வாகனம் இந்த எரிபொருளுக்கு ஏற்றதா என்பதை உடனே சரிபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இன்று முதல் E20 பெட்ரோல் விற்பனை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. 20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலவையுடன் தயாரிக்கப்படும் இந்த புதிய எரிபொருளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் புதிய நடைமுறையின்படி, இனிமேல் E20 பெட்ரோல் நாடு முழுவதும் பரவலாக கிடைக்கும் பொதுவான எரிபொருள் வகையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த பெட்ரோல் இந்திய தர நிர்ணய விதிகளுக்கு உட்பட்டு, குறைந்தபட்சம் 95 RON தரத்துடன் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைப்பது, வெளிநாட்டு எரிபொருள் சார்பை சுருக்குவது, சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பது, உள்நாட்டு எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவது போன்ற பல நோக்கங்களைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், எத்தனால் உற்பத்தி தொடர்பான விவசாய மற்றும் தொழில் துறைகளுக்கும் இது ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read news: கோவை திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் இல்லை- கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரம்…
2023க்கு பின்னர் சந்தைக்கு வந்த பெரும்பாலான புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் E20 பெட்ரோலை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வாகனத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பழைய மாடல் வாகனங்களில் fuel efficiency குறைவு, engine performance மாற்றம், rubber மற்றும் plastic spare parts விரைவில் சேதமடையும் அபாயம், fuel line தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், குறிப்பாக பழைய கார் மற்றும் பைக் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனம் E20 பெட்ரோலுக்கு பொருத்தமானதா என்பதை service centre அல்லது vehicle manual மூலம் முன்கூட்டியே சரிபார்த்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, E20 பெட்ரோல் அமலுக்கு வந்தாலும் உடனடி விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், புதிய எரிபொருள் பயன்பாட்டால் வாகனங்களின் செயல்திறனில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை ஓட்டிகள் கவனமாக கண்காணிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

