கோவை: Make In India வை செயல்படுத்தி இருந்தால் இந்த நிலை கேஸ்க்கு வந்திருக்காது என கனிமொழி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி Make In India திட்டத்தை செய்திருந்தால் கேஸ்க்கு இந்த அளவிற்கான ஒரு நிலை வந்திருக்காது என கனிமொழி பிரச்சாரத்தின் பொழுது தெரிவித்தார்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.
இதில் பேசிய கனிமொழி, இந்த வேட்பாளர் அன்னை சோனியா காந்தி தேர்ந்தெடுத்து கை உங்கள் கைகளில் ஒப்படைத்து இருக்கக்கூடிய வேட்பாளர், ராகுல் காந்தி உங்களுக்காக அனுப்பி வைத்திருக்க கூடிய வேட்பாளர், இவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து அரசியல் ஆர்வம் கொண்டு அரசியலில் இணைத்துக் கொண்டு இருப்பதை என்னிடம் தெரிவித்தார், இந்த நாட்டை மதத்தின் பெயரால் பிரிக்கக்கூடிய பாஜக ஆர் எஸ் எஸ் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன் என கூறியிருக்கிறார், இதைக் கேட்கும் போதே மனமகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
இந்த நாட்டைப் பிரிக்க நினைப்பவர்களை எதிர்க்கக் கூடிய ஒரு கூட்டணியாக நம் கூட்டணி உள்ளது, இந்த நாட்டு மக்களை ஒருமைப்படுத்த கூடிய கூட்டணியாக சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் அத்தனை பேரும் உரிமைகளுக்காகவும் பாடுபடக்கூடிய இந்தக் கூட்டணி தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்றார்.
இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல் என்று முதல்வர் அடிக்கடி கூறுவார், இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கும் NDA விற்குமான தேர்தல் இந்த களம் என்பது கீழடிக்கும் நாக்பூருக்கும் நடக்கக்கூடிய போர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
என்றும் கீழடி தமிழர்களின் தாய்மடி, நாக்பூர் என்பது ஆர்எஸ்எஸ் தாய்மடி என்றும் கூறினார்.
இந்த தேர்தல் வெற்றி என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமான வெற்றி அல்ல, எத்தனையோ மாநிலங்களுக்கு அவர்களை (பாஜக) நம்மாலும் எதிர் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய வெற்றியாக இது அமைய வேண்டும்
என்றும் நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நம்பிக்கையை அனைத்து மக்கள் மனதிலும் உதிக்கக்கூடிய தேர்தல் வெற்றியாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என்றார்.
வட மாநிலங்களில் பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது அங்கு நீங்கள் உணவு உண்பது உடை உடுத்துவது கடவுள் வழிபாடு அனைத்தையும் அவர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும்
அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அந்த மக்களை படாதபாடு படுத்துவதையும் நாம் பார்த்திருக்கிறோம் என்றார்.
இப்படி மக்கள் இடையே பிரச்சனைகளை உருவாக்கி அரசியல் ஆதாயத்தை அவர்கள் தேடுகிறார்கள் என்றும் அங்குள்ள மக்களின் நிம்மதியை அமைதியை கெடுத்து பிரச்சனைகளையும் கலவரங்களையும் உருவாக்கக்கூடிய சூழல்களை உருவாக்குகிறார்கள் என்றும் கூறினார்.
மணிப்பூரில் அவர்கள் உருவாக்கி இருக்கக்கூடிய கலவரம் இன்று வரை தீரவில்லை தமிழ்நாட்டின் நாம் அமைதி பூங்காவாக வைத்துக் கொண்டிருக்கிறோம் அவர்களுக்கு இந்த மண்ணில் ஒரு பிடி மண் கூட கிடையாது என்பதை உணர்த்தக் கூடிய தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என்றார்.
இங்குள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியை பார்த்து பயப்படுகிறார், டெல்லி அமெரிக்காவைப் பார்த்து பயப்படுகிறது
இவர்கள் யாருக்கும் பயப்படாதவர்கள் எல்லாம் அல்ல என கூறிய கனிமொழி அவர்கள்(அமெரிக்கா) என்ன கூறுகிறார்களோ அதை கேட்டு நடக்கக்கூடிய ஆட்சி தான் டெல்லியில் நடைபெறுகிறது என்றார்.
பாஜக ஆட்சி வந்த உடனேயே ஆயிரம் ரூபாய் செல்லாது என கூறினார்கள், கோவிட் வந்த பொழுது அதிமுக ஆட்சி இருந்தது, அப்பொழுது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மருத்துவ பயன்பாட்டிற்கு க்யூ வில் நிற்க வேண்டியிருந்தது, நம்முடைய முதல்வர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் க்யூ வில் நிற்கக்கூடிய அவலம் களையப்பட்டது என்றும் இப்போது கேஸ் சிலிண்டர் காகியூவில் நிற்க போகிறோமோ என்ற அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
பிரதமர் அடிக்கடி Make In India என கூறுவார் ஆனால் எதையும் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என கூறினார். அனைத்திற்கும் ஹிந்தியில் நமக்கு விளங்காத பெயரை வைத்து விடுவார்கள் மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலை திட்டத்தை முழுதாக பெயர் மாற்றி திட்டமே இல்லாதது போல் மாற்றி விட்டார்கள் இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தலையாட்டிக் கொண்டு நிற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என கூறினார்.
Make In India என்று அனைத்தையும் இங்கு உருவாக்கி இருந்தால் இன்று கேஸ் இல்லை என்ற நிலை இருந்திருக்காது என்றும் கூறினார்.வார்த்தை ஜால கூட்டணி அமைத்துள்ளார்கள் அவர்கள் என கூறிய கனிமொழி, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடியவர்கள் எல்லாம் ஒரே அணியில் திரண்டு நமக்கு எதிராக நின்று கொண்டிருக்கிறார்கள்
நம்முடைய பிள்ளைகளின் பள்ளி நிதியை அவர்கள் கொடுப்பதில்லை கோவைக்கு மெட்ரோ திட்டத்தையும் கொடுப்பதில்லை என்றும் அவர்கள் வாக்கு கேட்டு வரும்பொழுது கேஸ் அப்பொழுது வரும் கல்வி நிதி எப்பொழுது வரும் மெட்ரோ எப்போது வரும் 100 நாள் வேலைக்கு என்ன வழி என்று கேள்வி கேளுங்கள் என்றார்.
தொடர்ந்து ஹிந்தி மொழியை திணித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சொல்லப் போனால் நேரத்தை கூட மாற்ற வேண்டுமாம், அறிவியல் பூர்வமாக சிந்திக்க கூடியவர்கள் இருந்தால் இந்த கஷ்டம் நமக்கு கிடையாது ஆனால் அவர்களுக்கும் அதற்கும் நீண்ட தூரம் என விமர்சித்தார். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேச எழுந்தாலே அவையை தள்ளி வைத்து விடுவார்கள், எங்களுடன் விவாதத்திற்கு இல்லாதவர்கள் தான் டெல்லியில் ஆட்சியில் இருக்கிறார்கள் அவர்களுடன் அதையே கற்றுக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி தருகிறோம் என்று கூறி வாக்கு கேட்கிறோம் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தொகுதியில் குறுந்தொழில் கற்றல் மையங்கள் அமைக்கப்படும், ஆண்டுதோறும் அரசு சார்பில் விவசாயம் கால்நடை கண்காட்சி கோவையில் நடத்தப்படும், வெளியூரிலிருந்து வந்து வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித் தரப்படும், வார்டு வாரியாக விளையாட்டு மைதானங்கள் அமைத்து தரப்படும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திமுக வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றும் சொல்லுவதை செய்வோம் செய்வதைத்தான் சொல்லுவோம் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றி தருவோம் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தமிழ் மக்களின் சுயமரியாதையே பாதுகாப்பதற்கு மாநிலங்களின் உரிமையை பாதுகாப்பதற்கு அமைதியாக வாழக்கூடிய ஒரு சூழலை பாதுகாக்க பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க சூரிய பிரகாஷுக்கு வாக்களியுங்கள் என்றார்.

