கோவை: கொரொனாவை விட கொடியவர் செந்தில்பாலாஜி என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராம் மற்றும் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இன்று காலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வி கே கே மேனன் சாலையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். அவரோடு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உடன் இருந்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது,
கொரோனாவை விட கொடிய தொற்று கரூரிலிருந்து கோவை தெற்கு தொகுதிக்கு வந்துள்ளது. கொரோனாவிற்கு கூட மருந்து உள்ளது இதற்கு கிடையாது எனவே அதனை விரட்டி அடிப்பீர்களா.. தோற்கடிப்பீர்களா..
செந்தில் பாலாஜியை இன்றைக்கு புகழும் முதலமைச்சர் ஸ்டாலின், கரூரில் அவரை மிக மோசமானவர் எனவும், அவரது தம்பி ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகவும் புகழ்ந்து பேசிய முதலமைச்சரே கூறியுள்ளார்.
அதிமுக கட்சி மக்களை நம்பி களத்தில் உள்ளது. ஆனால் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் பணத்தை நம்பி உள்ளார். கரூரிலிருந்து ஏன் தொகுதி மாறி நிற்க வேண்டும்.. கரூர் மக்கள் அவரை நிராகரித்து விட்டனர்.
கோவை தொழில்துறை நிறைந்த பகுதி அதை குறி வைத்து தான் செந்தில் பாலாஜியும் வந்துள்ளார். எனவே, தொழில் துறையினர் விழித்துக் கொண்டால்.. பிழைத்துக் கொள்ளலாம்.
செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் கருணாநிதியை என்னவெல்லாம் பேசி இருக்கிறார் என்பது சட்டமன்ற பதிவில் உள்ளது. ஐந்து கட்சிக்கு சென்று வந்தவர் அவர்.
திமுக ஆட்சியில் குடிநீர் வரி குப்பை வரி சொத்து வரி மின் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. அரிசி என்னை பருப்பு ஆகிய உணவுப் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது இதை கட்டுப்படுத்த திறனற்ற முதல்வராக ஸ்டாலின் ஆண்டு கொண்டிருக்கிறார். தொழில் நகரமான கோவை தொழில் செய்ய முடியாத நிலையில் இன்றைக்கு உள்ளது.
நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் டெல்லிக்கும் தமிழ்நாடுக்கும் தேர்தல் என்கிறார் ஸ்டாலின். அதிமுகவை பற்றி தவறாக சொல்வதற்கு எதுவும் இல்லாததால் டெல்லியை இழுத்து பேசுகிறார். எங்கள் ஆட்சியில் குறைகள் இருந்தால் சொல்லுங்கள், நாங்கள் பதில் சொல்கிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் அமைந்துள்ளதாகவும் இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் தேர்தல் என ஏன் பேச வேண்டும்..
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவினர் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்துவரும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள், திமுகவினரிடம் இருந்து சம்பளம் வாங்கவில்லை. மக்களுக்காக ஜனநாயகத்தோடு நடுநிலையோடு பணிபுரியுங்கள்.
வறுமையை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஆடுமாடு போல பட்டியில் அடைப்பவரை, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கம்பியில் அடைக்கப் போகிறோம். எனவே, இதற்கு அரசு அதிகாரிகள் துணை போகக்கூடாது.
கோவை, திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பை தரும் துறையாக உள்ளன. இந்த சிறு குறு தொழில் நிறுவனங்களின் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும். விஸ்வகர்மா சங்கம் உட்பட அனைத்து சங்க பிரதிநிதிகளும் பல கோரிக்கை கொடுத்துள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்ததும் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பேசி நிறைவேற்றப்படும்.
கோயம்புத்தூர் மக்கள் விழிப்புணர்வோடு இருக்கக்கூடிய மக்கள். இங்கு எங்குமே வீடுகளில் கருப்பு கொடியை பார்க்க முடியவில்லை.
உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டிற்கு வந்தபோது, பாராளுமன்ற தொகுதி மறுவரையறையில் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது என கூறியுள்ளார். மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலமும் பாதிக்கப்படாத அளவிற்கு தொகுதி மறுவரை செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர். எனவே ஸ்டாலின் இது குறித்து பொய்யான பிரச்சாரம் செய்ய வேண்டாம்.
மகளிருக்கான இட ஒதுக்கீடு காரணமாக மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதற்காக ஸ்டாலின் இதுபோன்ற செய்து வருகிறார்.
தமிழ் மண்ணில் பிறந்து பல வருடங்கள் மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் என்னைப் பற்றி பேசி உள்ளார், மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கு அவர் என்ன கொண்டு வந்துள்ளார்.. அவருக்கு என்னைப் பற்றி பேச தகுதி உள்ளதா..
பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 39 பேர் வெற்றி பெற்று சென்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டு முதல் இவர்களால் தமிழ்நாட்டிற்கு எதையாவது கொண்டு வந்தார்களா..
அதுவே அதிமுக, காவேரி நதிநீர் பிரச்சனை என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு வெளியிடுவதில் காலதாமதம் செய்த போது, 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து தமிழர்களுக்காக குரல் கொடுத்துள்ளோம்.
நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் எந்த குரலும் கொடுக்கவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. பாலியல் வன்கொடுமைகள் கஞ்சா போதையால் வன்முறை சம்பவங்கள் கஞ்சா விற்பனை என அனைத்தும் அதிகரித்துள்ளது. இதனால் சிறுமிகள் பெண்கள் முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறி உள்ளதால் இளைஞர்கள் குழந்தைகள் ஆகியோர் சீரழிந்து வருகின்றனர் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 3 மாதத்தில் கஞ்சா போதை விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
அதிமுக பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைத்துள்ளார். 1652 கோளியில் பல ஆண்டு கனவுகளான அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது, அச்சுக்கடவு அவிநாசி இரண்டாவது கட்டம் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது, சின்னியம்பாளையம் மேம்பாலம், தடையில்லாத குடிநீர் வசதி ஆகியன, விமான நிலைய விரிவாக்கம் மற்றும் மற்ற பணிகள் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் தான் கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டு பல வசதிகள் உருவாக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் புதிய நூற்றாண்டு கட்டிடம், நொய்யல் ஆற்று புனரமைப்பு, காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம், ஈச்சனாரி நான்கு வழிச்சாலை, புதிய அரசு கலைக் கல்லூரிகள், ரயில்வே மேம்பாலங்கள், குளக்கரை புனரமைப்பு, புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல திட்டங்களை கோவைக்கு வழங்கியுள்ளோம். ஆனால் ஸ்டாலின் அதிமுக கோவைக்கு எதுவும் செய்யவில்லை என கூறுகிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறக்க முடியுமா..
திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த திட்டங்கள் என்னென்ன நன்மைகள் நடந்தது என விவாதிக்க நான் தயார்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வங்கிக் கணக்கில் பத்தாயிரம் சிறப்பு உதவி தொகை செலுத்தப்படும், குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் 2000 வழங்கப்படும், வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், நகர பேருந்துகளில் ஆண்களும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம், நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும், குறைந்த வட்டியில் அவர்களுக்கு புதிய கடன் வழங்கப்படும், ரேஷன் கடைகளில் தரமான அரிசி, விலையில்லா பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்படும். வீடில்லாத ஏழைகளுக்கு காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும். எனவே, மக்கள் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பேசினார்.


