கோவை: கோவை வடக்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் வழங்கலை எதிர்த்து, வேட்பாளர் கருப்பு துணி கட்டி நூதன முறையில் பிரச்சாரம் செய்து கவனம் ஈர்த்தார்.
கோவை வடக்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், “என் ஓட்டு விற்பனை அல்ல” என்ற வாசகத்துடன் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராகுல் காந்தி வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை சாய்பாபா காலனி NSR சாலையில் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த அவர், “மற்ற கட்சிகளைப் போல நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம்; நேர்மையான முறையில் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார். மேலும், தனது கட்சியின் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அரசியல் கட்சிகள் மாறி மாறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாக குற்றம்சாட்டிய அவர், தங்களது கட்சி பணம் வழங்காமல் சுத்தமான தேர்தலை முன்னெடுக்க விரும்புகிறது என்றும், பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பின்னர், வீ.கே. சசிகலா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நோட்டீஸாக அச்சிட்டு மக்களுக்கு வழங்கி, அவற்றை பற்றி விளக்கமளித்தார்.


