கோவை:மின்சார மற்றும் நிலை கட்டண உயர்வால் பாதிப்பு அடைந்த MSME தொழில்கள், கட்டணத்தை குறைக்கவும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கோவையில் கோரிக்கை வைத்தன.
மின்சார கட்டணம் மற்றும் நிலை கட்டணத்தை குறைத்தால் மட்டுமே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சியில் முன்னேறும் என தெரிவித்தனர்.
கோவை சின்னவேடம்பட்டியில், கோயமுத்தூர் MSME Next Generation மற்றும் சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன் சார்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்து வரவிருக்கும் அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, ஏப்ரல் 23ஆம் தேதி அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து, அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிறு, குறு தொழில் அமைப்பினர்:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரவிருக்கும் அரசு போதிய வசதிகளை செய்து தர வேண்டும். குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் சரவணம்பட்டி முதல் மதுக்கரை வரை உள்ள சாலைகளை விரிவுபடுத்தி, மேம்பாலங்கள் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.
மாநகராட்சியில் உள்ள வரிகளை எளிமைப்படுத்த வேண்டும். அதேபோல், மாநகராட்சியில் செயல்படும் திட்டங்கள் முறையாக கிடைப்பதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
விவசாயிகளுக்கு குறை தீர்ப்பு நாள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது போல, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காகவும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதந்தோறும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும்.
தற்போது, மின்சார கட்டணம் உயர்வு மற்றும் நிலை கட்டண உயர்வு காரணமாக சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தற்போதைய அரசும் வரவிருக்கும் அரசும் மின்சார கட்டணம் மற்றும் நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் சுகாதார மையங்கள் அமைக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும், தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.


