கோவை: திமுக முக்கியஸ்தர்கள் தவெகவில் இணைய உள்ளார்கள் என சூலூர் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றி கழகம் எம்.எல்.ஏ சுகுமார், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை புரிந்தனர்.
கோவை விமான நிலையத்தில் இருவருக்கும் அக்கட்சியின் தொண்டர்கள் விசில் அடித்தும், பொன்னாடை அணிவித்தும், மலர்கொத்துகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், இந்தத் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் என்றும், தொகுதி மக்களை சந்தித்து நன்றி கூறச் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான போட்டி நிலவுகிறதா என்ற கேள்விக்கு, “அதனை தலைமை தான் முடிவு செய்யும். அரசியல் அனுபவமே தெரியவில்லை என்று கூறியவர்கள் கூட வாயடைத்துப் போகும்படி விஜய் செயல்பட்டு வருகிறார். தெளிவாக இருக்கிறார். எனவே அவரே முடிவுகளையும் எடுப்பார்” என்று தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினராக முதலில் சூலூர் குளத்தை தூர்வாரும் பணிகளை செய்ய உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி, சாலை வசதி, கழிவறை வசதி மற்றும் குடிநீர் பிரச்சினையை சரிசெய்து தருவேன் என்றும் தெரிவித்தார்.
Read news: Breaking: எஸ்.பி.வேலுமணியின் கட்சிப் பதவி பறிப்பு!
உதகை பாஜக எம்.எல்.ஏ மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியது தொடர்பான கேள்விக்கு, “அதனை தலைவர் பார்த்துக் கொள்வார்” என்று பதிலளித்தார்.
தமிழக வெற்றி கழகத்தில் இரண்டு தினங்களில் முக்கியஸ்தர்கள் சிலர் இணையப் போகிறார்கள் என்றும், கோவையில் தற்போது ஆறு தொகுதிகளை தமிழக வெற்றி கழகம் பெற்றுள்ள நிலையில் அடுத்து 10 தொகுதிகளையும் பெறுவோம்; அதற்கான மக்கள் ஆதரவு உள்ளது என்றும் தெரிவித்தார்.
“யார் யாரெல்லாம் வந்து இணையப் போகிறார்கள் என்று என்னால் கூற முடியாது. ஆனால் குறிப்பாக திமுகவில் இருந்து இணைவார்கள்” என்று தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பேசினீர்களா என்ற கேள்விக்கு, “எஸ்.பி.வேலுமணி என்னுடன் படித்தவர் தான். அவருடன் வழக்கமாகத்தான் பேசினேன். அதிகாரப்பூர்வமாக எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.



