கோவை: கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 26 அ.தி.மு.க., நிர்வாகிகளின் கட்சிப் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.
நடப்பு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியில் பூசல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் த.வெ.க., அரசுக்கு ஆதரவாக அவர்கள் வாக்களிப்பு செய்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வினர் எதிராக வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேரவையிலிருந்து வெளியே வந்த சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தனர்.
அந்த பேட்டியில் திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி பேரம் பேசியதாகவும், தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதிர்ச்சிகர தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பேட்டியின் வீடியோ காட்சிகள்
பதவி பறிப்பு
இந்த நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், ஆர். காமராஜ், சி. விஜயபாஸ்கர், தங்கமணி, அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்ட 26 நிர்வாகிகளின் அ.தி.மு.க., கட்சிப் பதவியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். மேலும், 17 புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்துள்ளார்.
read news: சிங்காநல்லூரைத் தொடர்ந்து கோவையில் மேலும் 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன… முதல்வர் விஜய் உத்தரவு அமல்
கோவையைப் பொறுத்தவரையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பதவி வகித்து வந்த எஸ்.பி.வேலுமணியின் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செ.ம.வேலுச்சாமி அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



