டாஸ்மாக் வருவாய் இழப்பு: விஜய்க்கு கோவையில் பட்டயக் கணக்காளர்கள் கொடுத்த அட்வைஸ்!

கோவை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நிலையில், அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட வழிகள் உள்ளதாக தென்னிய பட்டயக் கணக்காளர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement

தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் (TAASI) மற்றும் பாம்பே பட்டயக்கணக்காளர் சங்கம் (BCAS) இணைந்து கோவையில் ‘IPO மற்றும் வரி உச்சி மாநாட்டை’ நடத்தின.

மே 15 மற்றும் 16 என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், தென்னிந்தியா முழுவதிலும் இருந்து 70-க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்களும், 50-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன.

இந்திய தொழில் மற்றும் நிதி சூழல் வேகமாக மாறி வரும் நிலையில், நிதி மேலாண்மை, வரி நிர்வாகம், நிறுவன ஆளுமை மற்றும் தொழில்முறை ஒழுக்கம் ஆகியவற்றில் பட்டயக்கணக்காளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், துறையில் அவர்களை மேம்படுத்தும் விதமாகவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

Advertisement

இந்த மாநாடு குறித்து தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தலைவர் வெங்கடேஷ், பாம்பே பட்டயக்கணக்காளர் சங்கத்தின் தலைவர் ஜுபின் பில்மோரியா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது வெங்கடேஷ் கூறியதாவது:-

Advertisement

கடந்த 1940-ல் தொடங்கப்பட்ட எங்களது சங்கத்தில் தென்னிந்தியா முழுவதும் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கலந்துரையாடல் மூலம் எங்கள் உறுப்பினர்களை துறை சார்ந்து மேம்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.

இம்மாநாட்டின் மூலம் தொழில் நுணுக்கங்களை அவர்கள் கற்றுக்கொள்ள முடியும். இந்த மாநாட்டில் பட்டயக்கணக்காளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மட்டுமல்லாது, சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள் என்று பல்துறை நிபுணர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

வருமான வரியில் மாற்றமில்லாத சூழலில், தற்போது ஜி.எஸ்.டி. நிலைத்தன்மை பெற்றுள்ளது. இதனை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் மட்டும் உள்ளன. இதுவும் நாளடைவில் சரியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியா முழுவதும் பட்டயக்கணக்காளர்கள் மத்தியில் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக 174 முறை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 44 முறை மேம்படுத்தப்பட்ட பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பட்டயக்கணக்காளர்களின் பணி மேலும் சுலபமாகும்.

உள்நாட்டில் மட்டுமல்லாது, இங்கிருந்தே வெளிநாடுகளிலும் தற்போது பணி செய்யும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, இந்த அரசு மக்களுக்கு நல்ல காரியங்களைச் செய்ய வாழ்த்துகிறோம்.

போர் காரணமாக அனைத்து நாடுகளிலும் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இங்கும் அந்த பாதிப்பு உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தங்கம் அத்தியாவசியப் பொருள் இல்லை என்பதால், பிரதமர் கூறியபடி அதனை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

எந்த அரசு வந்தாலும் இலவசங்கள் கொடுத்தால் பொருளாதார பாதிப்பு ஏற்படும். தொழில்துறையை அரசு பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் இழக்கும் வருவாயை தமிழக அரசு தொழில்துறையை மேம்படுத்துவதன் மூலமும், அதிகரிப்பதன் மூலமும் ஈடு செய்ய முடியும்.

நிறுவனங்கள் அதிகமாகும் போது ஜி.எஸ்.டி மூலம் வருவாய் அதிகரிக்கும். அதோடு, பெரு நிறுவனங்கள் வரும்போது, அது சார்ந்த சிறிய நிறுவனங்களும் தொடங்கப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, வாங்கும் சக்தியும் அதிகரிக்கும். இவை அனைத்துமே ஒரு அரசுக்கு வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கும் வழிமுறைகள்தான்.

எனவே, தமிழக அரசு பெரிய நிறுவனங்களை மாநிலத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் செயலாளர் காமேஷ், பொருளாளர் மகேஷ் பிரபு, கோவை ICAI தலைவர் சுர்வஜித் ஆகியோர் உடனிருந்தனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...