கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் போலீசாருக்கு அச்சங்குளம் கரையோர பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், அவரது முகம் கல்லால் அடித்து சிதைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேருக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
போதை அல்லது பணத் தகராறு காரணமாக, அந்த மூவரில் இருவர் சேர்ந்து மற்றொருவரை தாக்கி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக அந்த பகுதிக்கு வந்தார், அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அச்சங்குளம் மற்றும் நீலாம்பூர் பைபாஸ் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனங்களை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



