கோவை: கோவை மாநகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்த இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளுக்கு போலீசார் ஆலோசனை வழங்கினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 80 வயது மூதாட்டி மற்றும் சுங்கம் அருகே வசித்து வந்த பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். நகைக்காக இந்த கொலைகள் நடைபெற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஒரு சம்பவத்தில் வீட்டில் வேலை செய்த பெண் மற்றும் மற்றொரு சம்பவத்தில் சலவை துணிகளை வழங்க வந்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு கொலை சம்பவங்களும் கோவையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின.
இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டார்.
அதன்படி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் பணிபுரியும் காவலாளிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமை தாங்கினார்.
துணை கமிஷனர் தேவநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், கோவை மாநகரில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவலாளிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு கேமரா வசதி, வெளிநபர்கள் வருகையை பதிவு செய்தல் மற்றும் அவர்களது விவரங்களை சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், இரவு நேர பணியின்போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவலாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.



