கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே நடுரோட்டில் பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ராகவி (37) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஒண்டிப்புதூர் சூர்யா நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை வேலை முடிந்து தனது உறவினருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சூர்யா நகர் காமாட்சி நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த வாலிபர் ஒருவர் ராகவி மீது வேண்டுமென்றே மோதியதாக கூறப்படுகிறது.
இதனை ராகவி தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், அவரது ஆடையை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதுகுறித்து ராகவி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு (35) என்பது தெரியவந்தது. இவர் ஒண்டிப்புதூர் சூர்யா நகரில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
இதையடுத்து போலீசார் பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



