கோவை: கோவையில் டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 215 மதுபானக் கடைகளை மூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். இதில் சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில், மாவட்டத்தில் தற்போது 215 கடைகள் மூடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் மாநில இணைப் பொதுச்செயலாளர் மதியழகன் கூறுகையில்,
“பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. எங்களது பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்.
தற்போது கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் 215 கடைகள் மூடப்பட்டுள்ளன. கடை அடைப்பு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தற்போது கடை அடைப்பு என்பது இல்லை. கடைகளை மூடியுள்ளோம்.
கேரளாவில் உள்ள மதுபானக் கடைகள் போலவே தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் கடைகளை நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஆனால் அரசியல் காரணங்களால் இதனை சில அரசியல்வாதிகள் செயல்படுத்துவதில்லை” என்றார்.
இந்த பேச்சுவார்த்தையில் எல்பிஎப் சங்கம் சார்பில் ராக்கிமுத்து, தமிழ்ச்செல்வன், சிஐடியு சார்பில் ஜான், செந்தில் பிரபு, பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் ராமசுந்தரம், ஜீவா, விற்பனையாளர் சங்கம் சார்பில் மதியழகன், சுதாகர், அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் ராமானுஜம், சரவணன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வி.சி. சரவணன், நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



