கோவை: குடிக்க பணம் கேட்டு மிரட்டிய உறவினரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை துடியலூர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (34). இவர் தனியார் எரிவாயு நிறுவனத்தில் லோடுமேனாக பணியாற்றி வந்தார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக தனது உறவினரான கண்ணனின் தோட்டத்து வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான பத்மநாபன், அடிக்கடி குடிப்பதற்காக பணம் கேட்டு கண்ணன் மற்றும் அவரது தாயாரை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு மே 27-ம் தேதி கண்ணனின் வீட்டுக்கு வந்த பத்மநாபன், மீண்டும் குடிக்கப் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், வீட்டில் இருந்த இரும்புத் தட்டால் பத்மநாபனின் தலையில் தாக்கியுள்ளார். பின்னர் அருகில் கிடந்த விறகுக் கட்டையால் சரமாரியாக தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பத்மநாபன் உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு போலீசில் சிக்காமல் தப்பிக்க திட்டமிட்ட கண்ணன், பத்மநாபனின் உடலை அருகிலிருந்த பாறைப் பகுதிக்கு கொண்டு சென்று, தவறி விழுந்து இறந்தது போல் நாடகமாடியுள்ளார்.
மேலும், தலையில் கருங்கல்லை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன் பிரபு ஆஜராகி வாதாடினார்.
வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி சிவக்குமார், கண்ணன் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பைத் தொடர்ந்து கண்ணன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


