கோவை: கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவை குற்றாலம் அருவிக்கு, வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையத்தை தற்காலிகமாக மூட வனத்துறை முடிவு செய்துள்ளது.
இதனால், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று (ஜூன் 6) ஒருநாள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அருவியை காணவும், குளிக்கவும் திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் இன்று வருகை தருவதை தவிர்க்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Also Read: கோவை அரசு பொருட்காட்சி 2026 … ஒரு ரவுண்டு போயிட்டு வரலாமா?
நீர்வரத்து மற்றும் வானிலை நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சூழ்நிலை சீரான பிறகு சுற்றுலா மையம் மீண்டும் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


