கோவை: ஈமுகோழி பண்ணை மோசடி வழக்கில் இரண்டு பேருக்கு பத்தாண்டு சிறை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈமு கோழி பண்ணை நடத்தி பண மோசடி செய்த வழக்கில் இரண்டு பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவு.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பெரிய மணலி பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆதவன் என்ற பெயரில் ஈமு கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இதனை சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடத்தி வந்தனர். அப்பொழுது அவர்கள் பல கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
அதில் ரூபாய் 1.5 லட்சம் கொடுத்தால் 6 ஈமு கோழிகள் வழங்கப்படும் எனவும், மேலும் 24 மாதங்களுக்கு ரூபாய் 15,000 மற்றும் 4 கிராம் தங்கம் உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்தனர். இதனை நம்பி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் லட்சக் கணக்கில் பணம் செலுத்தினர். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் நிறுவனத்தினர் சொன்னபடி முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை, கோடிக் கணக்கில் சுருக்கி விட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்டம் பொருளாதாரம் குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில் ஈமு பண்ணை நடத்தி 115 பேரிடம் ரூபாய் 2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் பண்ணை உரிமையாளர்கள் சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம், கணக்கர் அமுதா, பங்குதாரர்கள் ராமகிருஷ்ணன், ஆனந்தன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி விசாரணையில் மோசடி வழக்கு சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோருக்கு தல 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஒரு கோடியே மூன்று லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு அளித்தார். மற்ற மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர்.


