கோவை: தனியார் கல்லூரிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும் வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏழை மற்றும் எளிய மாணவர்களின் உயர்கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கல்லூரிகளின் முழுமையான கட்டண விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மேலாண்மை (Management) இடங்கள் உள்பட அனைத்து இடங்களுக்கும் ஒற்றைச் சாளர (Single Window System) முறையில் அரசே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மேலாண்மை இடங்களுக்கான சேர்க்கையையும் அரசே மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் உள்ள அனைத்து சுயநிதிப் பாடப்பிரிவுகளையும் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளாக மாற்ற வேண்டும், தேவையான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், கல்லூரிகளின் உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகளை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

அனைத்து கல்லூரிகளின் ஆசிரியர் விவரங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், தமிழக அரசின் முயற்சியால் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கான சிறப்பு பயிற்சி திட்டங்களை தொடங்க வேண்டும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பிரிவுகளை மேம்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இது குறித்து பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் உடனடியாக தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மதுமான பாட்டிலுக்கு பத்து ரூபாய்க்கு கொதிக்கும் முதல்வர் ஏழை மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்த இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் இதுகுறித்து உடனடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒரு அமைச்சர் சாராய ஆலைகளில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளும் பொழுது உயர்கல்வித்துறை அமைச்சர் நடனமாடிக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சித்தார். பல்வேறு கல்லூரிகளில் லட்சக்கணக்கில் பேரங்கள் நடைபெற்று கொள்ளையடிக்கப்படுவதாகவும் இதனால் ஏழை மாணவர்களின் கல்வி வாழ்க்கை சிதைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். எனவே தமிழக அரசும் முதல்வரும் உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதுவரை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஏழை மாணவர்களின் கல்விக்காக குரல் கொடுக்கும் என்று தெரிவித்தார்.



