கோவை : கோவை கவுண்டம்பாளையம் அருகே முகவரி கேட்பது போல் நடித்து முதியவரிடம் செல்போனை பறித்துச் சென்ற சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த நல்லாம்பாளையம் ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனாட் (63). கடந்த ஜூன் 24-ஆம் தேதி இரவு, தனது வீட்டின் அருகே குப்பை கொட்டுவதற்காக வெளியே வந்திருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள், கணபதி பகுதிக்கு செல்லும் வழியை கேட்டுள்ளனர். முதியவர் வழிகாட்டிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த நபர், அவரது கையில் இருந்த செல்போனை திடீரென பறித்துக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெனாட் கூச்சலிடுவதற்குள், மூவரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பெனாட் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்த செல்போன் பறிப்பு சம்பவத்தில் ரத்தினபுரியைச் சேர்ந்த கிஷோர் (22), ரத்தினபுரி நாராயணசாமி நகரைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் (21) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட செல்போனை மீட்டனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சங்கனூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (24) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



